பதிவுகள்

 

 

கே: ஐயா, தங்கள் தத்துவ-விளக்க உரைகளில் ”பதிவுகள்” (Imprints)  என்பது பற்றி விரிவாக உரைக்கின்றீர்கள். நான் இதுகாறும் கற்றதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே இந்தக் கேள்வியை அனுப்புகிறேன்; ”பதிவுகள்” என்றால் என்ன ?

 

 

வி: ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டு விளக்கத்தை தொடங்குவோம்: சில மாதங்களுக்கு முன்னே நடந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஓட்டுப் போடப் போனோமே, அப்பொழுது என்ன செய்தார்கள்? இடது கை ஆள்காட்டி விரலில் கரும்புள்ளி ஒன்று முதலிலே குத்தினார்கள். (தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பிரதிநிதிகள் நம் முகத்தில் கரியைப் பூசுவதற்கு இது முன்அறிகுறி என்றுகூட நான் வேடிக்கையாகச் சொன்னேன்!) ஓட்டுச் சாவடி விட்டு வெளிவருவதற்குள்ளாக அந்தக் கரும்புள்ளி விரலில் உறைந்து உலர்ந்து போனது.  அதற்குப் பின்னே அதைச் சோப்புப் போட்டுக் கழுவினாலும் சீயக்காய் போட்டுத் தேய்த்தாலும் அகலவில்லை. ஆனால் நிரந்தரமாகத் தங்கி விட்டதா என்றால் இல்லை. சிறுகச் சிறுக அந்தக் கரும்புள்ளி உதிர்ந்து கொண்டே வந்து ஒரு மூன்று மாதக் காலத்திலேயே இல்லாதது ஆனது.

 

        தாவர மையாலான புள்ளிக்கு இவ்வளவு நீடிப்பு – வலு எப்படி உண்டானது? அந்த மை நம்முடைய சருமத்தின் செல்கள் (Cells) என்று சொல்லப்படுகின்ற சிற்றறைகளோடு பிரிக்க இயலாத அளவுக்குப் பின்னிப் பிணைந்து விட்டது. உடல் வளர்ச்சியின் போக்கிலே பழைய செல்கள் உதிர உதிர கரும்புள்ளித் துகள்களும் படிப்படியாக உதிர்ந்தன.

 

        விரலினுடைய சருமத்தின் மேற்பரப்பிலே வைக்கப் படும் பதிவு விலகவே காலம் தேவைப்படுகிறது என்பதைப் பார்க்கும் போது சருமத்திற்கும் ஆழமாக நாம் ஒரு பதிவை ஏற்படுத்திக் கொண்டோம் என்றால் அது அகலுவது எவ்வளவு சிரமமான காரியமாக இருக்கும் என்பதை உங்களாலே ஊகித்துக் கொள்ள இயலுகிறதல்லவா? ஒரு குறட்பாவுக்கும் விளக்கம் இங்கே புரியும் :

 

     “தீயினால் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே

      நாவினால் சுட்ட வடு”

 

        “வடு” என வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுவது “தழும்பு” (Scar) என்பதை. அதுவும் பதிவே ஆகும்.

 

ஆராய்ச்சியைத் தொடர இன்னொரு உதாரணத்திற்குச் செல்வோம். பள்ளியில் படிக்கும்போது ஒருவர் டைப்ரைட்டிங் (Typewriting) கற்றுச் சான்றிதழும் பெற்றிருந்தார். பிறகு 50 ஆண்டுகளுக்கு அவர் டைப்-மெஷின் அருகிலேயே செல்லவில்லை. இப்போது 65 வயதான அவர் முன்னாலே ஒரு டைப்-மெஷினை வைக்கிறோம். பழைய நினைவில் அவர் அதைத் தட்டத் தொடங்குவார். அவருக்கே வியப்பூட்டும் வகையிலே அவரது விரல்கள் தமக்குரிய எழுத்துக்களைத் தப்பில்லாது இயக்குகின்றன. வெகு  வேகமாக அவர் டைப் அடித்து அந்தத் தாளைப் பெருமையோடு காட்டுகிறார். இந்தச் சாதனையை அவராலே எவ்வாறு நிகழ்த்த இயன்றது? ஐம்பதாண்டுகளுக்கு முன்னாலே அவர் பயின்ற பழக்கம் அவருடைய தசைநார்களிலும் புலன்களிலும் பதிந்து அடக்கமாக இருந்து இப்பொழுது எழுச்சியுற்றது. சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது இவையும் இது போன்ற பதிவுகளே. ஒருமுறை இந்தக் கலைகளைப் பயின்று விட்டோமானால் வாழ்நாள் முழுவதும் அவற்றை மறந்துவிட இயலாது என்பது அனுபவ-ஞானம்.

  

சற்று முன்னே திருக்குறள் ஒன்றை மேற்கோளாகச் சொன்னேனே! எங்கிருந்து அதை எடுத்தேன்? நினைவிலிருந்து, அதாவது மூளையின் செல்களிலிருந்து.

 

சரி, உடலையும் மனத்தையும் இயக்குவது யாது? அதுதான் உயிர். “உயிர்” என்றால் என்ன? பிரபஞ்ச களம் முழுவதும் வியாபித்திருக்கின்ற ஆற்றல்–துகள்கள் (Basic Energy Particles) நம் உடலுக்குள்ளே அழுத்தம் பெற்று இயங்கும்போது, அந்த ஆற்றல்–துகள்களின் தொகுப்பே “உயிர்” ஆகும். எனவே நம்முடைய செயல்கள், எண்ணங்கள் இவற்றின் பதிவுகள் உயிராற்றல் மீதும் அழுந்தி நிற்கும்.

 

ஒரு குழந்தை எப்படிக் கருவாக உருவாகிறது? அதனுடைய தந்தை, தாய் இந்த இருவரின் வித்திலிருந்து.  வித்து (Seed) என்பது அவர்களுடைய உயிராற்றலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லக்கூடிய சாதனம் (Vehicle or medium).  ஆக, நம்முடைய பதிவுகள் நமது மகன், மகள்களுக்கும் சென்று சேர்வதானது இயற்கையின் நியதி.

 

சாதகர்களாகிய நாம் “ஆன்மா” என்ற சொல்லுக்கு “உயிர்” என்றே பொருள் கொள்ளலாம். மகாபாரத இதிகாசத்தில் ஒரு முக்கிய பகுதி “யக்ஷப்பிரச்னம்” நச்சுப் பொய்கைக் கரையிலே யக்ஷனானவன் பாண்டவர்களில் முதல்வனான யுதிஷ்டிரனிடம் கேட்ட கேள்விகளையும் அவன் அவற்றிற்கு அளித்த தீர்க்கமான விடைகளையும் கொண்ட பகுதி அது. அதிலே ஒரு கேள்வி வருமாறு: “தர்மபுத்திரனே, ஒரு மனிதனின் ’ஆத்மா’ யாது   “ஒரு மனிதனின் ஆத்மா அவனுடைய மகனே. எனவேதான் வேதங்கள் புத்திரனை ‘ஆத்மநாமாஸி’ என்ற சொற்றொடரினால் வர்ணிக்கின்றன.”  எவ்வளவு தெளிவான விளக்கம் பார்த்தீர்களா? நம் நாட்டு ஞானிகளுக்குப் பதிவுகளின் அடிப்படை குறித்து எந்தக் குழப்பமும் இருந்ததில்லை என்பதை இது காட்டுகிறது.

 

நம் ஒவ்வொருவருடைய உயிரும் பிரபஞ்சகளம் முழுவதும் படர்ந்து நீக்கமற நிறைந்துள்ள ஆற்றல்-துகள்களின் ஒரு சின்னஞ்சிறிய பகுதி என உணர்ந்தால் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் பதிவுகள் பிரபஞ்ச ஆகாசத்திலும் உடனடியாக விழுந்து நிற்கின்றன என்பது தெரியவரும்.  எனவே தான் அறிவில் சிறந்தவர்களாலே ஒரு கருத்துச் சொல்லப்பட்டுள்ளது, “நீ செய்யும் எந்த ஒரு செயலும்  கூடப் பிரபஞ்சம் முழுமையுமே பாதிக்கச் செய்யும்”  என்பதாக, (“You cannot pluck a flower in your garden without disturbing the stars in the heaven”).

 

தொற்று நோய் (infectious disease) எவ்வாறு பரவுகிறது?  நோய் கொண்டவனின் உடல்-செல்கள் வெளியேறும் போது நோய்க் கிருமிகளையும் தாங்கிச் சென்று மற்றவர்கள் சுவாசத்தின் வாயிலாக அவர்களது நுரையீரல்களை அடைந்து அவர்தம் இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. “நான் செய்தது என்னோடு நின்றது” என ஒருவன் சொல்வானாயின் அஃது அறியாமையின் வெளிப்பாடல்லவா?

 

          பதிவுகள் (Imprints) குறித்த அடிப்படை இதுகாறும் விவரிக்கப்பட்டது. இதனை மீண்டும் ஒருமுறை கவனாமாகப் படித்து நினைவில் பதிந்து கொண்டால் மற்றவர்களுக்கும் இந்த விளக்கத்தை நீங்கள் தந்திட இயலும்.

 

          பூமியிலே நாம் வாழும் காலத்திலே அமைதியோடும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்குப் “பதிவுகள்” பற்றிய அறிவு இன்றியமையாததாகும்.

     

(Excerpt from a Lecture by Sage TGN)


Send this Answer to a friend!
Also Visit www.tgnfoundation.org