இல்லறம் ஏற்கவிருக்கும் மணமக்களுக்கு அண்மையில் நமது ஆசான் தத்துவஞானி  திரு T.G.நாராயணசுவாமி அவர்கள் அளித்த

திருமண வாழ்த்து

 

            நமது தத்துவ விளக்க நிகழ்ச்சியில் மணமக்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்து கலந்துகொள்வதானது அவர்களது இல்லற வாழ்க்கைக்கு ஒரு மங்கலமான தயாரிப்புத் தொடக்கமாகும். மகனைச் "சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" எனச் சொல்கிறது சங்க இலக்கிய வரி. வள்ளுவப் பெருந்தகையும் "தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது", எனக் கூறியுள்ளார்.

 

சில ஆண்டுகட்கு முன்னர் வரை இது போன்று நாடி வரும் இருவீட்டாருக்கும் யான் pre-marital counselling என்ற வகையிலே இரண்டு மணிநேரம் ஒதுக்கி, அவர்கட்குத் தேவையான விளக்கங்களைத் தருவதுண்டு. பெற்றோர்கள் பலர் பயிற்சி-வகுப்பின் முடிவிலே சொல்வார்கள்: "மணமக்களுக்கும் மேலாக நாங்கள்தாம் பயனடைந்தோம். எங்கள் இளமைப் பருவத்தில் இந்த விளக்கம் கிட்டியிருந்தால் எங்கள் இல்லற வாழ்க்கையை எவ்வளவோ சீராக அமைத்துக் கொண்டிருப்போம்!" என்று. அந்த மணமக்களுக்கும் நான் நடத்தித் தந்த திருமண தம்பதியருக்கும் இப்போது நாற்பதாண்டுக்கு மேலாக வயதாகியிருக்கும். அவர்களிலே தற்போது வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் வசிக்கின்ற சிலர் இன்றும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

        

திருமண விழாக்களிலே நான் விளக்கிவந்த மையக்கருத்து யாதெனில், வள்ளுவப் பெருந்தகை இல்லற உறவை 'நட்பு' என்றுதான் குறிப்பிடுகிறார். மாபாரத இதிகாசத்திலும் இதே சொல் காணப்படுகிறது. எனவே இல்லற வாழ்க்கையில் நல்ல நட்பின் இலக்கணம் இருந்தாக வேண்டும். ஒருவரை ஒருவர் குறைத்துப் பேசுவது, காட்டமான வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற பலவீனங்களைத் தொடக்கத்திலிருந்தே தவிர்த்தாகவேண்டும். கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும்; ஆனால் அது முரண்பாடாக வளர அனுமதிக்கலாகாது. இதையெல்லாம்விட ஒரு வலுவான தத்துவத்தைத் தம்பதியர் பேணிக் காக்க வேண்டும். அதுதான்: மனமானது அமைதியோடும் நிறைவோடும் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாகவும் இருக்கும் வரைதான் இரத்தத்தின் இரசாயனம் வளம் தருவதாக அமையும். எனவே  அடுத்த தலைமுறை அப்பொழுதுதான் உருவாக வேண்டும் என்ற உறுதியில் தளர்ச்சி ஏற்படவே விடலாகாது.

 

"சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் ஒரு கருத்து இனிமையாக விளக்கப்பட்டுள்ளது. மணமகன் மணமகளிடம் சொல்வான்: "நீயும் நானும், வெவ்வேறு இடங்களில் பிறந்து வளர்ந்தவர்களாயிற்றே; அண்மைக்காலம் வரை நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகவில்லையே. என்றாலும் அன்புடைய நெஞ்சம் தாம் கலந்தனவே. இது வியத்தகு நிகழ்வல்லவா!" கவிஞர் கண்ணதாசனுடன் ஒருமுறை காரில் செல்லும்போது இந்தச் செய்யுள் பற்றி உரையாடிக்கொண்டிருந்தோம், பின்னர் கவிஞர் எழுதித்தந்த திரைப்படக் கவிதையில்

"இருவர் உள்ளம் ஒருமுகம் நதிகள் சங்கமம் நம்

 உறவு சொல்லும் மங்கலம் மஞ்சள் குங்குமம் இந்த

  உலகம் யாவும் மாறினும் என்றும் நிரந்தரம்"

என்ற வரிகள் தோன்றின. அப்பொழுது நான் எண்ணினேன் 'இந்தப் பிரபஞ்சத்திலே நாம் காணும் அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றவையே, அப்படியெனில் நிரந்தரம்  என்ற சொல் எப்படி வந்தது? ஆனால், துரிய நிலையில் பிறந்த கவிதையில் தவறு இருக்க முடியாதே". பல ஆண்டுகளுக்குப் பிறகு தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்ட போதுதான் கவிதையின் உட்பொருள் விளங்கலானது நாம் வாழ்நாளில் செய்யும் செயல்கள் அத்தனையும் அந்த நிரந்தரத்தை நோக்கி நாம் செல்வதற்கு ஏதுவாக அமைய வேண்டும். படித்து வேலை செய்கின்ற போதும், இல்லற உறவு ஏற்கின்ற போதும், குடும்பம் நிர்வாகம் செய்கின்ற போதும் இந்த நினைப்பு மாறாதிருத்தல் வேண்டும். விலங்கினத்திலிருந்து பரிணாம அழுத்தத்தின் காரணமாகப் பிறந்து வந்த மனிதனுடைய பயணம் இன்னும் முற்றுப் பெறவில்லை. மனிதனானவன் தெய்வத்தன்மை அடைந்தாக வேண்டும். எனவேதான் வள்ளுவப் பெருந்தகை 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்'  என்று வேதவாக்காகச் சொல்லிப் போந்தார்.

 

                            திருமணவாழ்த்து

உத்தமனும் உத்தமியும் உன்னதமாய் வாழ்ந்திடவே

உத்தரவா தம்நல்கும் ஓர்வழியாம் சத்தான

நட்பதுவே இல்லறமாம் நல்லறம் என்றுணர்ந்து

திட்டமுடன் வாழ்வீர் தெளிந்து

 

 

 

Send this article to a friend!
Also Visit www.tgnfoundation.org