வேதாந்தமும் சித்தாந்தமும்

 

பிரபஞ்சத்துக்கு ஆதியாகவும், ஆதாரமாகவும், முதலாகவும், மூலமாகவும் சர்வ வல்லமை கொண்டதுவுமானது (omnipotent) மெய்ப்பொருள். அதனை ஆதி என்றும், பகவன் என்றும், அறிவன் என்றும் வள்ளுவப் பெருந்தகை சொல்வார். அறிவு என்று சொன்னால் தத்துவத்திலே Consciousness என்று எடுத்துக் கொள்ள வேண்டும். All Consciousness. ஆகவே அறிவன் என்று சொல்வார், இறைவன் என்றும் சொல்வார். காரணச் சொல் தமிழிலே. இறைந்து இருக்கின்ற காரணத்தாலே இறைவன் (omnipresent) என்பதாக. ஆக இந்த பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியது என்றால், ஆதி என்று சொல்வார். ஆதல் என்ற செயலுக்கு அடிப்படையாக இருக்கக் கூடியது ஆதி. இயங்கிக் கொண்டிருக்கின்ற பிரபஞ்சத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய், இயங்காத ஒன்று அடிப்படையாக இருக்கிறது, இருப்பு நிலையாக இருக்கிறது. அது தான் ஆதி. பகவன் என்று ஏன் சொன்னார்? பகவு என்றால் அறிவு. ஆக அந்த இறைநிலை அறிவு வடிவாய் (omniscient) இருக்கிறது. எனவே தான் அதை omniscient, onmipresent, omnipotent என்று சொல்கிறார்கள். ஆக,

 

Being is God

Becoming is Universe

Knowing is Consciousness

This is Realisation.

 

அப்படி மெய்விளக்கம் முழுவதும் இங்கு வந்து விடுகிறது. ஒரு நொடியிலே வந்துவிடுகிறது. உபநிஷத ஞானம் இது. உபநிஷதத்திலே நான்கு மகாவாக்கியங்கள்.

 

பிரஞ்ஞானம் பிரம்மம்,

அயன் ஆத்மன் பிரம்மம்,

தத்வம் அஸி,

அஹம் பிரம்மாஸ்மி.

 

பிரஞ்ஞானம் என்றால் Consciousness. பிரம்மம் என்றால் இருப்புநிலை. உபநிஷதங்களில் பிரம்மம் என்று தான் இருக்கிறது. புராண கற்பனையில் பிரம்மன் என்று வந்து விட்டது. நான்கு முகம் வைத்துக் கொண்டு ஒருவன் பொழுது போகாத நேரத்திலே இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி அதில் துன்பத்தையும் உருவாக்கி வைத்தான். இதுதான் திரைப்படங்களிலே இருக்கிறது. பாவேந்தர் பாரதிதாசன் புராண திரைப்படங்களைப் பற்றி சொன்னார், பரமசிவன் அருள் புரிய வந்துவந்து போவார், பதிவிரதைக்கு துன்பம் வந்து பழையபடி தீரும் என்பதாக. இது தான் புராணங்கள் செய்து வைத்திருக்கின்றன. இந்த கற்பனை நம் உள்ளத்திலே அழுத்தப் பட்டிருக்கிறது.

 

உபநிஷதங்கள் பிரம்மன் என்று சொல்லவில்லை, பிரம்மம் என்று சொல்லின. தெளிவாகச் சொல்கிறோம் அது ஒரு நிலைதான் என்று. ஆதி என்று சொல்கிறோம். பகவன் என்றால் அறிவு வடிவமாக இருக்கிறது. யார் இதை தெரிந்து கொள்கிறார்கள்? நாம் தெரிந்து கொள்கிறோம். ஆறாவது அறிவு இருக்கக் கூடிய காரணத்தாலே தெரிந்து கொள்கிறோம். பறவையோ விலங்கோ தெரிந்து கொள்ளாது. பாரதி இதை தெளிவாக விளக்குகிறான். மோனநிலையில் இருக்கக் கூடிய சிவபெருமான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். நெடுங்கடலில் இருக்கக் கூடிய திருமால் என்று சொல்கிறீர்கள். முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் அல்லா என்று சொல்கிறோம். இயேசுவின் தந்தை என்று சொல்கிறோம். இத்தனையும் எதை சொன்னார்கள் ஐயா? அறிவே (Consciousness) வடிவமாக இருக்கக் கூடிய அந்த தெய்வத்தை தான் சொன்னார்கள். இதை ஏன் சிரமப்பட்டு நாம் அறிந்து கொள்ள வேண்டும்? மானுடனே. துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறாய் வாழ்க்கையிலே. அந்த துன்பம் நீங்க வேண்டும். எனவே அறிந்து கொண்டு தான் ஆக வேண்டும்.

 

ஆதிசூடி இளம்பிறை அணிந்து

மோனத்திற்கும் முழுவெண் மேனியன்

கருநிறங் கொண்டுபாற் கடல்மிசை கிடப்போன்

முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்

இயேசுவின் தந்தை என பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந் துணராது

பலவகையாக பரவிடும் பரம்பொருள்

ஒன்றே;அதனியல் ஒளியுறும் அறிவாம்

அந்நிலை கண்டார் அல்லலை அகற்றினார்

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவாம்

உனக்கு வாழ்க்கையிலே துன்பம் நீங்கி விடும். மரணமிலாப் பெருவாழ்வு நீ பெறுவாய் Consciousness is God என்று தெரிந்து கொண்டாய் என்றால். வேத மகாவாக்கியம் நான்கிலே இது ஒன்று. முதல் வாக்கியம் பிரஞ்ஞானம் பிரம்மம், Consciousness is God, b=a என்று போட்டுக் கொள்ளலாம். அடுத்த வாக்கியம் என்ன சொல்கிறது? அயன் ஆத்மன் பிரம்மம், c=a என்று வந்துவிட்டது. ஆக a=b=c. இப்பொழுது ஆசான் என்ன சொல்கிறார்? அத்தனையும் ஒன்று என்று ஆகிவிட்டது. நீயும் அதுதான், தத்வம் அஸி. மூன்றாவது மகாவாக்கியமாக வருகிறது. தத்வம் அஸி என்று ஆசான் சொல்லிவிட்டார், நிரூபித்துக் காட்டிவிட்டார் அவர். ஆனால் நான் பிரம்மம் என்று நானல்லவா உணர்ந்து கொள்ள வேண்டும், நான் தான் அந்த ஆதி என்று உணர்ந்து கொள்ள வேண்டுமே. அஹம் பிரம்மாஸ்மி நான் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். அதை நான்தான் செய்ய வேண்டும், இன்னொருவர் வந்து அதை செய்து விட மாட்டார்கள். எனவே தான் சொல்கிறேன், பிரம்மஞானம் தட்டிலே வைத்து இன்னொருவர் கொடுத்துவிட முடியாது. Brahma Jnaanam cannot be offered on a platter. ஆத்ம ஞானம் வரை ஒருவர்க்கு கொடுக்கலாம். பிரம்மஞானம் எனக்கு உணர்வாக வரவேண்டும். அது வாராத வரை வாழ்க்கை நிறைவு பெறாது.

 

அந்த பிரஞ்ஞானம் பிரம்மம் என்ற மகாவாக்யத்தை தான் நம்முடைய வள்ளுவப் பெருந்தகை முதல் குறட்பாவிலே சொல்கிறார் அவ்வளவு அழுத்தமாக.

அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி

பகவன் முதற்றே உலகு.

எழுத்து வரிசை அகரத்தில் தொடங்குகிறது, இது நாம் சரிபார்க்கக் கூடிய உண்மை. தெரிந்ததை வைத்துக் கொண்டு, நாம் யூகத்தால் அறிந்ததை சரிபார்த்துக் கொள்ளும்படி செய்கிறார். ஆதி பகவன் முதற்றே உலகு என்பது நாம் யூகத்தால் அறிகிறோம், அதை உறுதிபடுத்திக் கொடுக்கிறார். ஒன்றும் அறியாமலா அவ்வை பெருமாட்டி சொல்வாள்? தேவர் குறளும் திருநான்மறை முடிவும் ஒருவாசகம் என்றுணர் என்று.

 

நான்மறைமுடிவு என்றால் வேதத்தினுடைய அந்தம், வேதாந்தம், வேதத்தினுடைய முடிவு. அதுதான் உபநிஷதம். வேதத்தினுடைய பகுதி ஆகிப் போனது. அந்த வேதாந்தத்தை உருவாக்கின அறிஞர்கள் என்ன செய்தார்கள்? பிரபஞ்ச இயக்கத்தை பார்த்தார்கள், பஞ்சபூதத்தினுடைய கூட்டாக அத்தனையும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த பஞ்ச பூதங்களை, இயற்கை சக்திகளை எப்படி நம் ஆக்ஞைக்கு கொண்டு வரலாம் என்ற முறையை அவர்கள் கண்டு கொண்டார்கள். அதுதான் வேதங்களாக விரிந்திருக்கின்றன. வெளியே இருக்கக் கூடிய பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டு இதற்கு அடிப்படை எதுவாக இருக்கும், எங்கிருந்து தோன்றியிருக்கும் என்று கண்டு பிரம்மம் என்று சொன்னார்கள் அதை. நாம் மெய்ப்பொருள் என்று சொல்கிறோம். வள்ளுவப் பெருந்தகை குறட்பாக்களிலே மெய்ப்பொருள் என்ற சொல் அடிக்கடி வரும். அதை பழக்கப் படுத்த வேண்டும் என்று நான் எண்ணிக் கொள்கிறேன். ஆங்கிலத்தில் கூட மெய்ப்பொருள் (Meiporul) என்று எழுத பழுகுவோம். Brahmam என்று எழுதும் போது Meiporul என்றும் எழுதினால் என்ன என்பதாக. அந்த மெய்ப்பொருள் தான் அடிப்படையாக இருக்கிறது என்று வேதத்தை உருவாக்கிய அறிஞர்கள் கண்டுகொண்டார்கள்.

 

தென்நாட்டு அறிஞர்கள் பார்த்தார்கள், சிந்தனையாளர்கள். என்ன கணக்கு எனக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாலும் அந்த கணக்கு எங்கே போடுகிறேன் நான்? உள்ளத்தில் வைத்து தான் போடுகிறேன். அந்த மனத்துக்கு அடிப்படை என்ன? என்று பார்த்து சித்தத்தை எடுத்துக் கொண்டார்கள். சித்தத்துக்கு அடிப்படை என்ன என்று பார்த்துக் கொண்டே போனார்கள். உயிரிலிருந்து படர்ந்து வருகிறது மனம் என்று பார்த்தார்கள். அந்த உயிருக்கு அடிப்படை என்ன என்று பார்த்துக் கொண்டு போனார்கள், மெய்ப்பொருளிலே கொண்டு நிறுத்தியது. ஆக சித்தத்தை வைத்து பயணத்தை தொடங்கினார்கள். சித்தத்தின் அந்தம் மெய்ப்பொருள் ஆகிப் போனது. அங்கு வேதத்தை வைத்து தொடங்கி வைத்தார்கள். வேதத்தின் அந்தம் மெய்ப்பொருளாகிப் போனது, வேதாந்தம் ஆகிப் போனது. தென்னகத்தில் சித்தத்தை வைத்து தொடங்கினார்கள் மெய்ப்பொருளில் கொண்டு நிறுத்தியது. சித்தாந்தம் ஆகிப் போனது. இரண்டுக்கும் வித்தியாசம் கிடையாது. Plus infinity is the same as minus infinity.

 

உருவங் கொடுக்கப்பட்ட கடவுள் ஒருவன் வானத்துக்கப்பால் இருந்து கொண்டு பிரபஞ்சத்தை உருவாக்கினான், என்னையும் உருவாக்கினான் என்ற தத்துவம் இங்கே தகர்த்தெறியப் படுகிறது. Personal god தகர்த்தெறியப் படுகிறது. இந்த உண்மையை தான் திரிபுர ரகசியம் என்ற அரிய நூல் சொல்கிறது, யோக வாசிஷ்ட்டம் என்ற அரிய நூல் சொல்கிறது. சுவாமி இராமதீர்த்தர் போன்றவர்கள் இதை விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இவற்றை சம்பிரதாய வேதாந்திகள் படித்திருக்கிறார்கள், எடுத்துச் சொல்ல அவர்களுக்கு திராணி இல்லாது இருக்கிறது.

 

ஆக இடைகாலத்தில் என்னவானது? குழப்பம் வந்துவிட்டது. தத்துவ விளக்கம் குறைய குறைய ஒரு குழப்பம் வந்தது. சித்தாந்தம் என்றால் சமயத்தை சார்ந்தது என்று. சைவ சித்தாந்தம், வைணவ சித்தாந்தம் என்று பிரித்து சொல்ல பழகிக் கொண்டு விட்டார்கள். நாம் இங்கு சொல்லக் கூடிய வழியிலே ஒரு புதுமுறை இருக்கிறது என்று சிலர் கண்டு கொண்டு சொல்வார்கள். அது என்ன புதுமுறை என்று சொன்னால், வேதாந்தமும் சித்தாந்தமும் ஒன்று தான் என்று சொல்கிறோம். தாயுமானவர் சொல்வார் இல்லையா,

வேதாந்த சித்தாந்த சமரசம் ஆகும் எனவே

பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலமல்லவோ?

பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமே!

 

இதற்கொப்ப நம் பயிற்சிமுறையை இங்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். எனவே தான் புதிதாகத் தென்படும், விஞ்ஞான ரீதியாக உண்மைகளை இங்கே கொடுத்துக் கொண்டிருக்கிறோம், பகுத்தறிவுக்கு புறம்பான எந்த ஒரு உண்மையையும் கொண்டு வரவில்லை இங்கே. அதே நேரத்திலே ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டுமா என்றால் ஏற்றுக் கொள்ள வேண்டாம். அறிவுக்கு உகந்தது என்றால் மட்டும் ஏற்றுக் கொண்டால் போதும் என்று சொல்கிறேன். வாழ்க்கைக்கு வளம் சேர்க்கக் கூடியது என்பதால் சொல்கிறேன்.

 

Excerpts from the Talks of Sage TGN

Send this article to a friend!
Also Visit www.tgnfoundation.org